தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், "ஜெயராஜ் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பென்னிக்ஸும் காவல் துறையினரைத் தகாத வார்த்தையில் திட்டி கொலைமிரட்டல் விடுத்தார். பின்னர் தரையில் உருண்டுபுரண்டதில் தந்தை, மகனுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜெயராஜை காவலர்கள் இழுத்துச் செல்வதும், அவரைப் பின்தொடர்ந்து அவரது மகன் பென்னிக்ஸ் காவலர்களை நோக்கி ஓடுவதும் போன்று பதிவாகியுள்ளது.