தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! - MK Stalin Advice to District Collectors

MK Stalin Advice to All District Collectors: பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க இயற்கை பொருட்களின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

tn-cm-stalin-held-a-consultation-meeting-with-forest-officials-and-environmental-officials
வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தமிழக அரசின் இரு முக்கியக் கொள்கை - மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:39 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று (அக்.3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இந்த அரசின் இரு முக்கியக் கொள்கை என்றார்.

“மீண்டும் மஞ்சப்பை” என்பது எனது மனதிற்கு நெருக்கமான திட்டம். இது நமது தமிழ்நாட்டின் பண்பாட்டில் வேரூன்றியிருப்பதால் இதனை முழுமையான பயன்தரும் விதத்தில் மக்கள் திட்டமாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை. பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்கப் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் மீது மாற்ற வேண்டும். இதனால், நமது மாநிலம் பசுமையான, இயற்கை சார்ந்த எதிர்காலத்தை நோக்கி வளர முடியும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்ப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

'மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உயர் அலுவலர்கள் உறுதி செய்வதோடு அவர்களின் செயல்பாடுகளில் பள்ளி, சுய உதவிக்குழுக்கள் மற்றும் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைக்க வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.

அனைத்துக் கடலோர மாவட்ட ஆட்சியர்களையும், வன அலுவலர்களையும், கடல் அரிப்பைத் தடுக்கவும், கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய, நமது முயற்சிகள் அனைத்தும் மக்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படும்போது மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் நல்ல பலனை அளிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட வன அலுவலர்களும் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் உங்களை அறிவுறுத்துகிறேன். மனித வனவிலங்கு முரண்பாடுகள் உடனடியாக கையாளப்படுவதையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி வழங்கப்படுவதையும் நீங்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'காலநிலை மாற்ற உத்திகள் உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தப்பட்டு அதனால் உள்ளூர் மக்கள் பாதுகாக்கப்படுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். சதுப்புநிலத் தோட்டங்கள், கடல் புற்கள் மற்றும் பவளப் பாறைகளை வளமையோடு மீட்டெடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலம் 14 ராம்சார் ஈரநிலங்கள் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது.

'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் சங்க கால மரங்களான 18 மர வகைகளைச் சேர்ந்த 14 லட்சத்துக்கும் அதிகமான மரங்களைப் பொதுமக்களின் பங்கேற்புடன் நமது அரசு நட்டுள்ளது என்று அறிகிறேன். அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள் ஆகியோர் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சங்க கால மரங்களை மீண்டும் நட்டு, நமது மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என்பதை இங்கே குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பசுமை தமிழ்நாடு இயக்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைகளை வழங்குகிறது.

வன உரிமைச்சட்டம் தகுதியுடைய பழங்குடியினருக்கும், தகுதியுடைய மலைவாழ் மக்களுக்கும், தனியருக்குமான அனுபவ உரிமைச்சான்று வழங்கவும், பொதுப்பயனுக்கான அனுபவ உரிமைச்சான்று வழங்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை 11 ஆயிரத்து 245 தனியர் அனுபவ உரிமைச்சான்றுகளும், 650 பொதுப் பயனுக்கான அனுபவ உரிமைச் சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் இன்னும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட வன அலுவலர்களும் இணைந்து செயல்பட்டு, விரைவில் முடிவெடுக்கவும் இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறினார்.

இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, அரசுத்துறைச் செயலாளர்கள், வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:திருச்சியில் பல்வேறு அம்சங்களுடன் BNC எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details