தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரியான அணுகுமுறை அவசியம்.. முத்திரை திட்டங்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அறிவுரை! - அரசியல் செய்திகள்

சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகினால், வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 16, 2023, 8:17 PM IST

சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தமிழ்நாட்டில் முத்திரை திட்டங்கள் (Iconic Projects) குறித்த முதல் கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் செயலாக்கத்தில் காணப்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இதுபோன்ற ஒரு ஆய்வுக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அப்போது மாநிலத்தினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அடையாளம் காணப்பட்ட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அரசின் முத்திரை திட்டங்கள் என வகைப்படுத்தி, அந்த திட்டங்களை விரைந்து முடித்திட உங்கள் அனைவரையும் நான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தேன் என குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், அத்திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும், முடிப்பதற்காக நீங்கள் நிர்ணயித்த இலக்குகளையும், நீங்கள் அனைவரும் நினைவில் நிறுத்தி அதன்படி பல திட்டங்களை முடித்து செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளதை நான் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறேன் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், தற்போது இரண்டாம் கட்டமாக, அந்தத் திட்டங்களோடு மட்டுமல்லாது, மேலும் பல புதிய திட்டங்களையும் இணைத்து, 11 துறைகளுடன் விரிவாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது எனவும், கடந்த ஆய்வுக் கூட்டத்துடன் இந்த ஆய்வுக் கூட்டத்தினை ஒப்பிடும்போது பெரும்பாலான திட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டாலும், சில திட்டங்களில் கவனம் தேவைப்படுகிறது என்பதனை இந்த நீண்ட ஆய்வுக்குப் பிறகு நீங்களே தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள் எனவும் கூறினார்.

தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் திட்டங்கள், எதிர்பார்த்த காலக்கட்டத்திற்கு முன்பே செயலாக்கத்திற்கு வந்துவிடும் என்பதற்கு உதாரணமாக, நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மாநகரிலே விரைவில் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கக்கூடிய கலைஞர் நினைவு நூலகம் போன்ற திட்டங்கள் சிறப்பான உதாரணங்களாக அமைந்திருக்கிறது எனக்கூறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இதுபோன்று பல நல்ல திட்டங்கள் நமது அரசால் அறிவிக்கப்பட்டு, அவற்றின் செயலாக்கத்தினை உங்களுடன் நான் தொடர்ந்து பல ஆய்வுக் கூட்டங்களின் வாயிலாக விவாதித்ததன் விளைவாக, இன்று நமது மாநிலம் தேசிய அளவில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டதை போல நம்முடைய இலக்கு என்பது தேசிய அளவில் முதலிடத்தை பெறுவது மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் தலைசிறந்து விளங்கவும், இத்தகைய ஆய்வுக் கூட்டங்களை சிறப்பான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும், ஒரு திட்டத்தின் வெற்றிக்கு பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் எனவும் அவர் அப்போது அறிவுறுத்தினார்.

அத்தகைய ஒருங்கிணைப்பினை உறுதி செய்ய இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் உங்களைப் போன்ற அரசின் உயர் அலுவலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்பது விரைந்து முடிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் அறிய முடிகிறது எனவும், அதே சமயத்தில், இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் இன்னும் சில திட்டங்களின் முன்னேற்றம் தொய்வாக உள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்படாவிட்டால் அவற்றின் முன்னேற்றம் மிக விரைவில் வரவிருக்கின்ற பருவமழை போன்ற இயற்கை இடர்ப்பாடுகளினால் மிகவும் பாதிக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பருவமழை தாண்டிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் போன்ற சூழ்நிலைகளால் பணிகளின் முன்னேற்றம் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

எனவே, ஏற்கெனவே தலைமைச் செயலாளர் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, உங்களுக்கு திட்டங்களை விரைந்து முடிக்க வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்களே வாய்ப்பான காலமாக உள்ளது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை எனக்கூரிய முதலமைச்சர், ஆகவே, சரியான திட்டமிடுதலுடனும், உரிய வழிகாட்டுதலுடனும் திட்டங்களை நீங்கள் அணுகினால், வரவிருக்கின்ற நான்கு, ஐந்து மாதங்கள் மாநிலத்தினுடைய பொற்கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட வலுவான காலங்களாக மாறும் என்பது உறுதி என குறிப்பிட்டார்.

மேலும், கவனம் செலுத்தப்பட வேண்டிய திட்டங்களாக நாம் விவாதித்த திட்டங்களை முடிப்பதற்கு தேவைப்படும் நிதி உதவி மற்றும் பிற துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைந்து பெற்று, சம்மந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் உரிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறிய மு.க ஸ்டாலின், இந்த ஆய்வுக் கூட்டத்தில், முடிவுற்ற பணிகளின், தொடக்க விழா நடைபெறும் எனவும், நீங்கள் உறுதியளித்துள்ள நாட்களில், தவறாது இத்திட்டங்களை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் உங்களை நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனக்கூறினார். மேலும், இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இதே போன்ற ஆய்வுக் கூட்டத்தில் உங்களை நான் சந்திக்கின்ற பொழுது, விவாதித்த பெரும்பாலான திட்டங்களில், சிறப்பான முன்னேற்றம் காணப்படும் என்றும், மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிடும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அமைச்சர்கள் இலாகா மாற்ற கடிதத்தை ஆளுநர் திருப்பிவிட்டது வருத்தம்: சபாநாயகர் அப்பாவு!

ABOUT THE AUTHOR

...view details