சென்னை:தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில், 'நான் முதல்வன் திட்டத்தின்கீழ்' போட்டித்தேர்வு பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் பிரதமர் நரேந்திரமோடியை தான் சந்தித்து அவரிடம் முன்வைத்த கோரிக்கைகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, 'இங்கு பேசிய அமைச்சர் அண்ணன் சிவி கணேசன் என்னை அன்பின் மிகுதியால் அண்ணன் என அழைத்தார். மேலும் நான் தீவிர அரசியலுக்கு மார்ச் மாதம் வந்ததாக கூறினார். நான் ஜூன் மாதம் தான் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்று தீவிர அரசியலுக்கு வந்தேன். அவர் என்மீது கொண்ட அன்பால் இது போன்று கூறியுள்ளார்.
எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து அங்கு சமைக்கப்பட்ட உணவை உண்பதை வழக்கமாக வைத்துள்ளேன். சென்னை மாவட்டத்தில் மட்டும் அதற்கு வாய்ப்பில்லை. தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தின் மூலம் இருபது மாதங்களில் 250 கோடி பெண்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசின் இந்த நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. 10 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 5ஆண்டுகளில் மத்திய அரசின் ssc தேர்வு 1.5 லட்சம் பணிகளுக்கு நடத்தப்பட்டது. இதே போல் மற்ற மத்திய அரசின் ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்களில் நிரப்பப்பட வேலை வாய்ப்புகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஒன்றிய பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். அது நிறைவேறும் என நம்புகிறேன். அதற்கு மாணவர்கள் தயாராகுங்கள். மத்திய அரசு தேர்வுகளுக்குத் தயாராக பயிற்சி நிலையங்களில் சேர முடியாத நிலை உள்ளது. அதற்காக துவங்கப்பட்டுள்ள இதனைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் உயர வேண்டும்.
உழைத்தால் வெற்றி பெறலாம். ஒரு அண்ணனாக என்றுமே நான் என்னால் முடிந்த அளவிற்கு உங்களுடன் இருப்பேன். இங்கிருக்கும் அனைவருமே நேற்று நள்ளிரவில் தான் சென்னைக்கு வந்து அடைந்தோம். நான் முதல்வன் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி நிகழ்ச்சி துவங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பே நிகழ்ச்சியை துவக்கி இருக்கிறோம். உங்களது வளர்ச்சிக்கு அரசும் முதலமைச்சரும் எப்போதும் துணை நிற்போம்' எனப் பேசினார்.
இதையும் படிங்க: அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்