சென்னை: கடந்த "5 நாட்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்" என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதைவிட குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணி திரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பதுதான் நமக்கான பெருமை.
சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக 'இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்' நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். முதல் கூட்டத்தைக் கடந்த 19 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சிதான், அனைத்து மாவட்டங்களிலும் 'செயல்வீரர்கள்' கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது.
திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 25 ஆம் தேதி வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தே அடுத்தடுத்த செயல்வீரர் கூட்டங்களை நடத்துவோம் என முடிவு செய்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஆய்வுக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கினோம்.
20 ஆம் தேதிதான் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைக் கூட்டி மிகப்பெரிய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். மீண்டும் செயல்வீரர்கள் கூட்டம் என்றால், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வருவார்களா என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது. ஆனால், அந்தச் சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அமைந்திருந்தது தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்.
திலகர் திடல் என்பது பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் உள்படப் பலர் கூட்டம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக நான் கலந்துகொள்வதும், அது இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமாக அமைந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. திடல் முழுவதும் இளைஞர்களின் தலைகளாகக் காட்சியளிக்கும் வகையில் கட்டுக்கடங்கா கூட்டம்.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில், சேலம் மாநாடு அமைந்திட வேண்டும் என்று உரையாற்றினேன். பின் தஞ்சாவூர் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் கூட்டம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி நம் கழகத் தலைவர் திறந்துவைத்த 'கலைஞர் கோட்டம்' அருகே கூட்டம் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இடமில்லாமல் சுற்றிலும் இளைஞர்கள் கூடி நின்றனர். நாம் பேச பேச அவர்களிடம் அவ்வளவு ஆரவாரம்.
இவர்களில் பல இளைஞர்களை நாங்கள் கழகக் கூட்டங்களில் பார்த்ததில்லை. நீங்க வர்றீங்கனு ஆர்வத்தோட வந்திருக்காங்க என்றனர் நம் நிர்வாகிகள். கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான அரசுக்கும், மாணவர்களை - இளைஞர்களை மையமாக வைத்து, அது செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே இந்த கூட்டம் என்பதை உணர முடிந்தது.
26 ஆம் தேதி காலை 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ், முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நாகப்பட்டின மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக விரிவாக நடைபெற்றது இந்த ஆய்வுக் கூட்டம்.
முதலமைச்சர் மக்களின் மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு என்றால், அது மிகையல்ல. அதனைத் மாலையில், நாகப்பட்டினம் நகரக் கழக முன்னாள் செயலாளர் சமீபத்தில் மறைந்த அண்ணன் 'போலீஸ்' பன்னீர் அவர்களின் இல்லம் சென்று அவரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.
நாகையில் கழகம் வளர்த்த அவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதால், அவரின் இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டும் என்று சென்னையில் இருந்து கிளம்பும் முன்பே மாவட்டக் கழகச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதேபோல் நாகையின் முன்னாள் நகரக் கழக செயலாளர் மறைந்த வீராசாமி அவர்களின் திருஉருவப் படத்துக்கும் மரியாதை செய்தோம்.
அண்ணன் பன்னீர், வீராசாமி போன்ற மூத்த முன்னோடிகளின் உழைப்பில் இருந்து இளைஞர் அணியினர் நாம் பாடம் கற்க வேண்டும். அடுத்து நாகை அவுரித் திடலில் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம். கழகத் தலைவர் அவர்கள் அரசுப் பணிகளுக்காக 3 நாட்களாக நாகையில் இருந்தார். அதற்கான முன்னேற்பாடு, வரவேற்பு எனப் பல பணிகளுக்கு நடுவிலும் செயல்வீரர் கூட்டத்தை மாநாடு போல் நடத்திக்காட்டினார் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் கௌதமன்.
நாகப்பட்டினம் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக்கொண்டு மயிலாடுதுறை புறப்பட்டோம். அங்கு சீனிவாசபுரத்தில் மயிலாடுதுறை - காரைக்கால் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம். "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக அதன்பிறகு அமைதி காப்பது ஏன்?.
நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் கருத்து கூறும்போதெல்லாம் அதற்கு ஏதாவது கண்டனம் தெரிவித்துள்ளார்களா?. சமீபத்தில், மாநாடு என்ற பெயரில் ஆடலும் பாடலும் கலைநிகழ்ச்சி நடத்தினார்களே, அதிலாவது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தினார்களா" என்று அதிமுகவின் நாடக அரசியல் குறித்துக் கேள்வி எழுப்பினேன்.
26 ஆம் தேதி தஞ்சாவூரில் தங்கிவிட்டு, 27ஆம் தேதி காலை ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளுக்காக பட்டுக்கோட்டை புறப்பட்டோம். வர்த்தகர் அணி துணைத் தலைவர் அண்ணன் பழஞ்சூர் செல்வம் அவர்களின் மகள் திருமண விழா, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பரமேஸ்வரன் அவர்களின் இல்ல திருமண விழா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ரமேஷ் அவர்களின் புதுமனைப் புகுவிழா, மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல் எனப் பட்டுக்கோட்டையில் காலை முதல் மாலை வரை தொடர் நிகழ்ச்சிகள்.
பட்டுக்கோட்டை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புதுக்கோட்டை புறப்பட்டோம். புதுக்கோட்டை மாவட்டக்கழக முன்னாள் செயலாளர் மறைந்த சிதம்பரம் அவர்களின் மனைவியார் ராஜேஸ்வரி அம்மையார் சமீபத்தில் மறைவுற்றார். அவரின் இல்லம் சென்று ராஜேஸ்வரி அம்மையாரின் திருஉருவப் படத்துக்கு மரியாதை செய்தோம்.
அங்கிருந்து நேராகப் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான செயல்வீரர் கூட்டம். "இனக் கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்லாத பிரதமர் மோடி, அதுகுறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவரை நாடாளுமன்றம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளதையும், நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு அஞ்சும் ஒரு பிரதமரை இப்போதுதான் நாடு பார்க்கிறது என்பதையும் எடுத்துக்கூறி, அதற்கு ஒரே தீர்வு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம். அதற்கு உறுதியேற்கும் நாளாக நம் மாநாடு அமையட்டும்" என்று புதுக்கோட்டையில் உரையாற்றினேன்.
அதைத் தொடர்ந்து திருச்சிக்கு விரைந்தோம். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துக்கான செயல்வீரர் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரங்கத்தின் உள்ளேயும், வெளியேயும் இளைஞர்கள் நிரம்பி வழிந்தனர். 'மாநாட்டு மன்னன்' என்று போற்றப்படும் அண்ணன் நேரு அவர்கள்தான் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கும் பொறுப்பாளர். "மாநாட்டுக்கான நிதியை நான் இப்போது அறிவிக்கப்போவதில்லை. மாநாட்டு பந்தலிலேயே அதை அறிவிப்பேன்" என்றார் நேரு அண்ணன்.
"நேரு அண்ணனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளுமே வெற்றிதான். அந்த வகையில், சேலம் மாநாடும் மிகப்பெரிய வெற்றிபெறும்" என்ற என் நம்பிகையை இளைஞர்களிடம் எடுத்துக்கூறி, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இந்த மாநாட்டை வெற்றிபெற வைப்பது செயல்வீரர்களான நம் இளைஞர்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது" என்று உரையாற்றினேன்.
செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமாரை சந்தித்து நலம் விசாரித்தோம். 'எந்த உதவி தேவை என்றாலும், அழைக்கவும்' என்று நம்பிக்கை தெரிவித்தோம். அன்று இரவு, திருச்சியில் தங்கிவிட்டு மறுநாள் 28 ஆம் தேதி, அன்பில் பொய்யாமொழி மாமா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
கழகத் தலைவர் அவர்கள் இளைஞர் அணி செயலாளராக இருந்தபோது துணைச் செயலாளராக இருந்து கழகத்தை வளர்த்தெடுத்த அவரின் பணிகளை நினைவு கூர்ந்தோம். அதே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான கவுன்ட் டவுண் டைமரை தொடங்கி வைத்தோம். பிறகு, அங்கிருந்து அரியலூர் புறப்பட்டோம். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றோம்.
அதைத் தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, அதன்பிறகு மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினோம். அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் அரியலூர் - செந்துறை இடையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கும் செய்யும் பணிகளை ஆய்வுசெய்து தரமான சாலை அமைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினோம்.