சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், மழை குறித்து முன்னெச்சரிக்கை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை எனக் கூறியிருந்த தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைத்தளத்தில், சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல, சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது. வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.
என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள். மீண்டும் சொல்கிறேன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை.