சென்னை: தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இணைந்து நடத்தும், "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" என்கிற கார் பந்தயம், வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.
இரவு நேரத்தில் நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்காக, பிரத்யேக சாலை அமைக்க 7 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், பந்தயத்திற்கு ஏற்றார் போல சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இரவு, பகல் முழுவதும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல், அண்ணாசாலை பகுதி மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதைகள், தடுப்புகள் மற்றும் சாலைகள் அகற்றப்பட்டு, பந்தய தூரமான 3.5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம்]
இந்நிலையில், நேற்று (நவ.24) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" பந்தயத்திற்கான பிரத்யேக சாலையை அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில், கார் ரேஸ் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, கார் ரேஸ் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். அதனை அடுத்து "ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4" நிகழ்விற்கான டிக்கெட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த போட்டிக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம்!