சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய் நிறுவனம்' 1600 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன் உதிரி பாகங்கள் அமைக்க முன் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக பதிவிட்டிருந்தார். இதனால், தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிரிக்கும் எனவும் அவர் அதில் பதிவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இதற்கு "ஃபாக்ஸ்கான் இன்ட்ஸ்ரியல் இன்டர்நெட்" என்ற நிறுவனம் தமிழ்நாடு அரசோடு எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. அதற்கான விளக்கமும் நிறுவனத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது என அறிவித்தது. இதனால், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதலீடு செய்வது உறுதியா இல்லையா என்ற ஒரு குழப்ப சூழ்நிலையிலே சென்று கொண்டிருந்தது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்றால் இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் வழங்கினால் மட்டுமே தொடங்க முடியும் என அவர்களுக்கு தெரிந்தவுடனே, அவர்கள் முதலீடு செய்ய வேறு மாநிலத்தை நோக்கி சென்றுள்ளனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் தான் முதலமைச்சர் பதில் ஏதும் கூறாமல் அமைதி காத்து வருவதாகவும் அண்ணமாலை கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக கூறிய நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்போவதாக சொன்ன தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் அளித்துள்ளது. இதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பியிருந்தார்.