சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்த பொய்களின் மொத்த வடிவமான, புனைவு உரைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை கோரிக்கை மனுவாக வழங்கி உள்ளார். தங்கள் கட்சிக்குள் நடக்கும் யுத்தத்தில் தான் வெற்றிபெற வேண்டி, அதற்காக தங்களது எஜமானர்களை சந்தித்துவிட்டு, அதே கையோடு, தான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்த உடன், சென்னையில் ஆளுநரையும் போய் சந்தித்துவிட்டு வந்துள்ளார்.
கோவையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம், அக்டோபர் 23ஆம் தேதி நடந்தது. கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் ஜூலை மாதம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த விவகாரங்கள் தொடர்பாக திடீரென ஞான உதயம் வந்தது போல, தூக்கத்தில் இருந்து எழுந்த கும்ப கர்ணன் போல ஆளுநரிடம் புகார் அளிக்க என்ன காரணம்?. தங்களது உட்கட்சி விவகாரத்தை மறைக்க முயற்சி செய்கிறாரா என எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
பாஜகவின் உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது. அவர் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஆனால் ஆதாரம் இல்லாத காரணத்தால் தான் இப்படி ஆளுநரை சந்தித்து அங்கலாய்ப்பு செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவாக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்கனவே தூத்துக்குடியில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடந்தி விளக்கினேன். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு, மாநிலம் முழுவதுமாய் சீர்குலைந்து விட்டது போல மாயத் தோற்றம் உருவாக்க முயல்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் எல்லாம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைந்த கதை வெளியே வந்துள்ளது. மருந்து தட்டுப்பாடு எங்கும் இல்லை. போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்துள்ளனர். அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்து வருகிறார்.
முதலமைச்சரின் தலைமையில் நடக்கும் சிறப்பான ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் தொடர்பாக பேச அமைச்சர் ரகுபதிக்கு விரைவில் நேரம் கொடுப்பார் என எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்... பின்னணி என்ன?