சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது பெய்த கனமழை காரணமாகச் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த கனமழையால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரது அவரது X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கடந்த சில தினங்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதி கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்தக் கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.