சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சமீபத்தில் தமிழகத்தை பாதித்த இரண்டு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த சுமைகளில் இருந்து மாநில அரசை மீட்க எந்த உதவியும் செய்யவில்லை.
2014 முதல் 2023 வரை 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் ரூ.2.46 லட்சம் கோடி வரி பகிர்வு தொகையாகும். ரூ.2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித் தொகையாக உள்ளது. ஆனால், நேரடி வரி வருவாயாக தமிழ்நாட்டில் இருந்து 6.23 லட்சம் கோடி ரூபாயாக மத்திய அரசு பெற்றுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெறும் மறைமுக வருவாய் பற்றிய விவரங்களை மத்திய அரசு தரவுகளைப் பகிரவில்லை. சட்டப்பேரையில் ஏற்கனவே கூறியதுபோல், தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மீண்டும் நாம் திரும்பப் பெறுவது 29 பைசாதான்" என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. உதாரணமாக, 2014-2015ஆம் ஆண்டு முதல் 2022-2023ஆம் ஆண்டு வரை பார்த்தால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ரூ.2.23 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்தால், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு மூலமாக ரூ.15.35 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.