சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தை அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மே 24) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், '“முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா?” என்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள 9 நாள் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டிவிட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக - கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், வெளிப்படைத்தன்மையோடு நடைபெறும் திமுக ஆட்சி மீது ஊழல் புகார் கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை இன்று தமிழ்நாடே கேட்கிறது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைகள்:தினமும் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பாணியில், முதன்முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்துவிட்டு - அதிமுக ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார். முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு முதலீடு பெறப் போகிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு முதல் நாள் ஒரு பேரணியை நடத்தி - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என ஒரு அரைவேக்காட்டுப் புகார் கொடுக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை:பொள்ளாச்சியில் இளம் பெண்கள் கதறியபோது கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் பழனிசாமி; அமைதியாக அறவழியில் போராடிய ஸ்டர்லைட் போராட்டக் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுத்தள்ளிவிட்டு, நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று பொய் சொன்னவர் பழனிசாமி; தனது துறையின்கீழ் பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களையே வேடிக்கை பார்த்தவர் இந்தப் பழனிசாமி என்பதுதான் வரலாறு.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்:“துப்பாக்கிச் சூடு” எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்தே நடந்தது என்பதை துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிவித்து, “பச்சைப் பொய் பழனிசாமியின் முகத்திரையை கிழித்து எறிந்துள்ளதை ஏனோ எதிர்க்கட்சித் தலைவர் வசதியாக மறந்துவிட்டு, இன்று தனது உட்கட்சி பிரச்சினையைத் திசை திருப்ப, தனது அமைச்சரவை சகாக்கள் இருவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்பட்டு விட்டதை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க “பேரணி” “புகார்” “அறிக்கை” என விட்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
ஈபிஎஸ்-உடன் மிதுன் வெளிநாடு பயணம்: “முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது. 13 நாள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்வதற்கு முன்பு அவரது மகன் மிதுன் அங்கு போனது பழனிசாமியின் ஊழல் பணத்தை முதலீடு செய்வதற்குத்தானோ? என்ற கேள்வி இப்போது எழுகிறது.
ஈபிஎஸின் சுற்றுலா ஊழல் பணத்தை முதலீடு செய்யவா?:அதிமுகவின் அமைச்சரவையையே ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு அனுப்பி, 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு' அழைப்பு விடுக்கிறேன் என்று கபட நாடகம் நடத்திச் “சுற்றுலா” சென்றது, ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குத்தானா? இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு சென்றுள்ளது பற்றி அவதூறு பரப்பும் எடப்பாடி பழனிசாமி, தனது மகனும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஏன் சென்றார்கள் என்பதை விளக்குவாரா?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பதிலாக "அதிமுக மாநாடு":கொடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை! அதுவரை அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அசிங்கமான அரசியல் செய்யாமல் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு நல்லது. 2015ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒரு “அதிமுக மாநாடு”! எடப்பாடி பழனிசாமி இருந்தபோது நடத்திய 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு எடுபடாத மாநாடு!