சென்னை: நீதிமன்றங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் பாஜக கட்டுப்பாட்டில் தான் உள்ளது என பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிச.21) நடைபெற்றது.
இதில், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறும்போது, “தமிழகம் முழுவதும் இன்று (டிச.21) முதல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், பல்லாவரம் அரசு மறைமலை அடிகள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 2023, 2024ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூபாய் 265 கோடியே 57 லட்சம் மதிப்பிலான, 5 லட்சத்து 47 ஆயிரத்து 676 மிதிவண்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்து 490 மிதி வண்டிகள் வழங்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.