சென்னை:தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் பற்றிய ஒதுக்கீடு விவரங்கள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,’’புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 25, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் 25 என மொத்தம் 50 அமைக்கப்பட உள்ளன. இதற்கு முன் புதிதாக அமைக்கப்பட்டுக் கடந்த ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன. எனவே, நமது தேவையைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதை உணர்த்தி அனுமதி பெறப்பட்டுள்ளது.
தற்போதைய மருத்துவமனைகள் எண்ணிக்கை:தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என 2,127 உள்ளன. அதேபோல, துணை சுகாதார நிலையங்கள் 8,714 உள்ளன. வட்டார மருத்துவமனைகள், வட்டம் சாராத மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகள் உள்ளன என்றார்.
மேலும் அவர், புதிதாகச் சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சட்டப்பேரவையில் பல பிரதிநிதிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
புதிய சுகாதார நிலையங்கள்:அதன் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப விதிகளைப் பின்பற்றி, புதிய ஆரம்ப-நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிவர்த்தியாக உள்ளது என்றார். மேலும், அவற்றில் ஒரு ஆரம்ப-நகர்ப்புற சுகாதார நிலையம் அமைக்க ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
மேலும், அங்கு பணியாற்றுவோர் சம்பளத்திற்கு ஒரு கோடியே 12 லட்சம் வரை செலவாகும். எனவே, இந்த புதிய சுகாதார நிலையங்களை உருவாக்க முதல் ஆண்டு நிதியாக 120 கோடி ரூபாய் செலவாகும். இதில் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமும், மாநில அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதமும் இருக்கும் என்றார்.
மலைவாழ் மக்கள் வசிப்பிடங்கள்-மருத்துவ சேவை:இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், உரிய முறையில் ஒப்பந்தம் கோரப்பட்டு கட்டுமான பணிகளை பொதுப்பணித் துறையினர் தொடங்குவார்கள். அந்த பணிகள் நடைபெற்று முடிந்த பின்னர், 2, 127 என்ற எண்ணிக்கையில் உள்ள ஆரம்ப-நகர்ப்புற சுகாதார நிலையங்கள் 2, 177 ஆக உயரும். மருத்துவத்துறையின் கட்டமைப்பை மேலும் மேலும் மேம்படுத்த முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தரமான மருத்துவ சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மானியக் கோரிக்கையின்போது 136 அறிவிப்புகளை வெளியிட்டோம். அதில் கிராமப்புற மருத்துவ கட்டமைப்பை உயர்த்த கிராமப்புற, நகர்ப்புறங்களில் புதிதாகச் சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தோம். அவை செயலாக்கம் பெற உள்ளன.அந்தியூர் மலைப்பகுதியில் முதல் சேவை:ஓராண்டுக்குள் இவற்றை பயன்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என நம்புகிறோம். கிட்டத்தட்ட 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவோம்.
குறிப்பாக, மலைக் கிராமங்களில் மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கி வருகிறோம். வரும் 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைக்கிராம பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளோம். வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தான், மலைவாழ் மக்களின் நலனுக்காக மருத்துவ சேவையை மேம்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் தொடங்கிய 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' மூலம், முதல் சேவையில் 93 லட்சத்து 60 ஆயிரம் 434 பேர் வரை பயன் பெற்றுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதில் பெருமை அடைகிறோம். விரைவில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட உள்ளது.
அதேபோல, ரிப்பீட் சர்வீஸ் என்ற வகையில் 2 கோடி 3 லட்சத்து 54 ஆயிரம் பேர் வரை இந்த சேவையைப் பெற்றுள்ளனர். விரைவில் ஒரு கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சரே நேரில் வந்து மருந்து பெட்டகம் வழங்க உள்ளார்.
மருத்துவர்கள் தேர்வு விரைவில்:'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்' மூலம் இதுவரை 1,22,172 பேர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக அரசு சார்பில் 108 கோடியே 96 லட்சத்து 37 ஆயிரத்து 422 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஆரம்ப - நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கான மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.
தீபாவளியையொட்டி, ஏற்படும் தீ விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கவனமுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். ஆபத்தான வெடிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குற்றம்சாட்டி உள்ளவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சட்ட ஆலோசனை பெற்று வருகிறார். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தீபாவளி தின்பண்டத்தில் உயிருடன் நெளியும் புழுக்கள் - மக்கள் பதற்றம்