தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வாரியத்தில் முறைகேடா? முடிந்தால் வழக்கு தொடரட்டும் ... அமைச்சர் செந்தில் பாலாஜி - TN Govt

தமிழ்நாட்டில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முடிந்தால் வழக்கு தொடரட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை தைரியமான ஆண்மகனாக இருந்தால்... அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்!
அண்ணாமலை தைரியமான ஆண்மகனாக இருந்தால்... அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்!

By

Published : Jul 28, 2022, 8:19 AM IST

சென்னை:மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் வழிகாட்டுதல்படி 15.6.2022 முதல் நேற்று வரை மின்வாரிய சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. 10,37,607 சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.

2,070 துணை மின் நிலைய பணிகள், 5,88,000 மரக்கிளைகள் அகற்றம் செய்யப்பட்டு, 33,772 மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 27,000 க்கும் மேல் சாய்ந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்தில் சரி செய்யப்பட்டுள்ளன. சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.

மரபுசாரா மின் உற்பத்தி: தமிழ்நாட்டில் திருவாரூர், கரூர், நாகை, சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 3,273 ஏக்கர் நிலம் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலங்களை மின் வாரியத்திற்கு வகை மாற்றும் பணிகள் நடைபெறுகிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணியை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.

இரண்டு ஆண்டுகளில் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 233 துணை மின் நிலையத்திற்கு இடங்கள் தேர்வாகி விட்டது. எஞ்சிய 83 க்கு இடத்தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1,08,000 மில்லியன் யூனிட் மின் நுகர்வில், 26,480 மில்லியன் யூனிட் மின்சாரம் மரபு சாரா உற்பத்தி மூலம் ஈடு செய்யப்படுகிறது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை. காற்றாலையில் அதிகபட்சமாக, 120 மில்லியன் யூனிட் அளவு வரை ஒரு நாளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக 5,676 முதல் 3,633 மெகாவாட் வரை சூரிய மின்சக்தி ஒரே நாளில் உற்பத்தி செய்யப்பட்டது. மின் வாரியத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் மார்ச் மாதத்தில் முழுமை பெறும்.

அண்ணாமலைக்கு கேள்விகள்: மின் வாரியத்தில் தவறு நடப்பதாக தெரிந்தால் நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்து வழக்கு பதியட்டும். அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனமான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தன்னுடைய இருப்பை காட்ட அண்ணாமலை இப்படி செய்கிறார்.

143 டாலர் என்றளவில் இந்தியாவில் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்வது தமிழ்நாடுதான். ஆனால் மத்திய அரசு, 203 டாலர் என்ற விலையில் கொள்முதல் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மின் வாரியத்தை மேம்படுத்த மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் சிறிய கட்டண மாற்றத்தை மட்டுமே அமல்படுத்தியுள்ளோம்.

பாஜக ஆளும் கர்நாடகா, உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவுதான். 37 விழுக்காடு மின் கட்டண உயர்வை அதிமுக ஆட்சியில் அமல்படுத்தினார்கள். மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் 12,700 கோடியாக தமிழ்நாடு அரசின் மானியம் அதிகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் மின் வாரியத்தில் வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் 2,200 கோடியை சேமித்துள்ளோம். தனியார் நிறுவனங்களுடனான உற்பத்தி ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் போடப்பட்டது. அதை ரத்து செய்வது அல்லது குறைந்த விலையில் வாங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 6,220 மெகாவாட் அளவு மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபுசாரா உற்பத்தி எல்லா பருவ காலக்கட்டத்திலும் நமக்கு கிடைக்காது. தமிழ்நாட்டில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

மின்வாரியத்தில் முறைகேடா? முடிந்தால் வழக்கு தொடரட்டும் ... அமைச்சர் செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் கிடையாது: குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கிவிட்டு ஸ்மார்ட் மீட்டர்க்கு மாதாந்திர கட்டணம் எப்படி வசூலிப்போம்? அவ்வாறு வெளியான கருத்து தவறானது. ஆட்டுக்குட்டி மேய்த்து நேர்மையாக வாழ்ந்த அரசு அலுவலர், அரசியல்வாதியாக மாறி அரவக்குறிச்சி தொகுதியில் எப்படி ஒரு வாக்குக்கு 1,000 ரூபாய் கொடுக்க முடியும்? அந்த பணம் எங்கிருந்து வந்திருக்கும்?

திமுக ஆட்சி அமைந்த பிறகு கல்வி நிலையம், கோயில் அருகே உள்ள 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. 2021 திமுக தேர்தல் வாக்குறுதி புத்தகத்தில் டாஸ்மாக் சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதியை எடுத்து படித்து பாருங்கள். பூரண மதுவிலக்கு சம்பந்தமாக எந்த வாக்குறுதியும் திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் கூறப்படவில்லை.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக மது விற்கும் கடை எது என்று ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கடையை பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டால், இன்றே ஆய்வுக்கு செல்ல நான் தயார்.

கடந்த 6 மாதத்தில் டாஸ்மாக்கில் 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானமே 330 கோடிதான்" என கூறினார்.

இதையும் படிங்க:திமுக அரசுக்கு தைரியம் இருந்தால் பாஜகவினர் மீது கை வைத்துப் பார்க்கட்டும் - அண்ணாமலை சவால்!

ABOUT THE AUTHOR

...view details