கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின் தேவையும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சரிசெய்ய மாவட்ட வாரியாக நகர்ப்புற மின் பிரிவு மற்றும் கிராமப்புற மின் பிரிவு என இரண்டு வகையிலும் நேற்று (ஏப்ரல் 20) மாலை முதல் அடுத்தடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நேற்று இரவு அடிக்கடி ஏற்பட்ட மின்தடை குறித்து ட்விட்டர் வலைதளத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில்,"மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.