செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் சென்னை:சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை வைத்திருந்ததற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்துவிட்டு, அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல இருந்தனர். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத் துறையினர் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், ஆகையால் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்றைய தினமே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நேற்று உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. அதன் பின்னர், செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காவேரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மருத்துவமனையின் ஏழாவது மாடியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமைச்சரைப் பார்க்க வெளிநபர்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அனுமதி இல்லை என்றும், மருத்துவர்கள் மட்டுமே உள்ளே சென்று அமைச்சரை பார்க்க முடியும் என்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சரைப் பார்க்க மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்ட நிலையில், காவேரி மருத்துவமனை முற்றிலும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. குறிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார், செந்தில் பாலாஜின் சிகிச்சை பெற்று வரும் 7-வது மாடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு காலை வெறும் வயிற்றில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள 7வது தளத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படை காவலர்கள் 15 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல மருத்துவமனை சுற்றி 2 உதவி ஆணையர்கள், 6 காவல் ஆய்வாளர்கள், 13 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டுக்குள் 2 சிசிடிவி கேமராக்கள், வெளியே 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் பார்வையாளர்கள் பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை, பார்வையாளர்கள் பார்க்க வேண்டுமென்றால் புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அடுத்தகட்ட விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இனி என்னென்ன சிகிச்சை வழங்கப்பட உள்ளது என்ற அனைத்து தகவலையும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில் அறிவிக்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்? - ஆளுநரின் மறுப்புக்கு அமைச்சர் பொன்முடி பதில்!