சென்னை:மின்துறை திட்டங்களின் நிலை பற்றிய தெளிவான தகவல்களை அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் தெரிவிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி மின் இணைப்புகளுக்கும் புதிய வடிவமைப்போடு, நவீன வசதிகளோடு கூடிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2022 - 2023ஆம் நிதி ஆண்டிற்கான வருவாய் இழப்பு ரூ.7825 கோடி என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு தரப்பட்டுள்ள கடன்களின் நிலுவைத் தொகையானது, ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ளது. 2022 - 2023ஆம் நிதி ஆண்டில் மின் கட்டண மானியமாக ரூ.13,783.68 கோடியும், வருவாய் இழப்பினை ஈடு செய்வதற்கான மானியமாக 12,315.36 கோடியும், இதர நிதி உதவிக்காக ரூ. 437 கோடியும் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
மேலும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் தொடர் முயற்சி காரணமாக தமிழ்நாடு, ஒரு வருட காலத்திற்கான கடனுக்கான வட்டியை ரூ.148 கோடி வரை சேமித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "ஸ்மார்ட் மீட்டர் என்பது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய வடிவமைப்போடு அமைக்க வேண்டும் என்பது மின்சார வாரியத்தினுடைய இலக்கு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத அளவிற்கு புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் தயாரிப்பிற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.