சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், ஆளுநரும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோரும் ஆளுநருடன் சந்தித்துப் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்கள் ரகுபதி மற்றும் ராஜ கண்ணப்பன், “உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சருடன், நான்கு அமைச்சர்களும் ஆளுநரைச் சந்தித்தோம். 21 சட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 10 சட்ட முன்வடிவுகளை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
பின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பத்து சட்ட முன்வடிவுகளும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 10 மசோதாக்களை அட்டவணை 7இல் நுழைவு 66-இல் உள்ளது எனக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி உள்ளார்.
அதை முதல் முறை திருப்பி அனுப்பும்போது எங்களிடம் ஆளுநர் குறிப்பிட்டிருந்தால், அதற்கான விளக்கங்களைத் தந்து அனுப்பி இருப்போம் என ஆளுநரிடம் தெரிவித்தோம். 21 மசோதாக்களில், தற்போது 20 மசோதாக்கள் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேளாண் விளை பொருள் சட்ட முன்வடிவு மட்டும் தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆளுநரிடம் இன்றைய பேச்சுவார்த்தையில் கேட்டு உள்ளோம். குறிப்பாக, அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 112 பேரின் முன் விடுதலை கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில் 68 விடுதலைக்கு அனுமதி வழங்கியும், 2 பேரின் விடுதலை ரத்து செய்தும் ஆளுநர் அரசுக்கு அனுப்பி உள்ளார்.