சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் புதிய அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ கல்லூரியில் சிறுநீரகவியல் துறை பேராசிரியர்களை கெளரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முழு உடல் பரிசோதனை மையத்தில் Gold, Diamond, Platinum என்று முன்று வகையான பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், இன்று அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீரகம், இருதயம், முடக்கண்மை உள்ளிட்ட ஒன்பது வகையான பரிசோதனை முழு உடல் பரிசோதனை மையத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் மூலை சாவடைந்த 16 பேரிடம் உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. உடல் உறுப்புகளை வைத்து 84 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீக்காயம் குறைந்த அளவிலே இருக்கும் என நம்புகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்தாண்டை போல் இந்தாண்டு 565 மாணவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினி முதலமைச்சர் கையால் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு