தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கக் கோரிய கோப்பு; ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை! - minister K Ponmudy

என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவா் பட்டம் வழங்கக் கோரி அளிக்கப்பட்ட கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்று அமைச்சா் க.பொன்முடி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சங்கரய்யாவுக்கு கெளரவ முனைவர் பட்டம்..ஆளுநருக்கு அமைச்சா் க.பொன்முடி கோரிக்கை!
அமைச்சா் க.பொன்முடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 12:58 PM IST

சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவா் பட்டம் வழங்க அனுமதி கோரி காமராஜா் பல்கலைக்கழகம் சமா்ப்பித்த கோப்பில் கையெழுத்திட ஆளுநா் ஆா்.என்.ரவி மறுத்துள்ளாா். அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1922 ஜூலை 15இல் பிறந்த மிகச்சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என்.சங்கரய்யா, நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி, கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி I-இல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த அத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நிலத்தகராறில் வழக்கறிஞர் வெட்டி கொலை; 8 பேருக்கு ஆயுள் தண்டனை - தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர் - வேந்தருக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.

இந்நிலையில், 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, என்.சங்கரய்யாக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் – வேந்தர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ராமேஸ்வரத்தில் கனமழை; ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் புகுந்த மழைநீர் - பக்தர்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details