சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடரந்தது. இந்த வழக்கு இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்ச ஒழிப்பு துறையின் நிலைப்பாடு குறித்து போதிய விவரங்களுடன் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவ.27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து நிதீமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகினார். அப்போது, வழக்கின் விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றியது தான், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதற்கு முக்கிய காரணம். ஆனால், அவ்வாறு மாற்றும்படி நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.
அவ்வாறு மாற்றுவது தொடர்பாக எங்களிடம் கருத்துகூட கேட்காத நிலையில், வழக்கை மாற்றியதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்பது. வேலூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிந்து நான்கு நாட்களில் தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நீதிபதியால் இந்த வழக்கு ஒன்பது மாதங்கள் விசாரிக்கப்பட்டது. மேலும், பொன்முடியின் அரசியல் எதிரிகள் யாரோ கடிதம் எழுதிய பின்னர் தான் வழக்கின் விசாரணை விழுப்புரத்திலிருந்து, வேலூருக்கு மாற்றப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த கடிதத்தை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வாதிட்டார்.