சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர், ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான நியாயவிலைக் கடைகளில் நேற்று (ஜன.4) தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான 3 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், “தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கத்தினை 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த ஜன.3 முதல் ஜன.8 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜன.9 அன்று முதலமைச்சரால் இத்திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான அனைத்து பொருட்களும் தரமானதாக, சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக பணியாளர்கள் பணிபுரிய வேண்டும் என்றும், நியாயவிலைக் கடைகள் அனைத்தும் சுகாதாரமாகவும், அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்றும், குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் பொங்கல் பரிசு தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்போது 4,455 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.