சென்னை:போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்ட 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டதோடு அதில், 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கூடிய சங்க நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட ரியல் எஸ்டேட் பிரமுகர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்றார். பதிவுத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்ற ஆண்டு 2022-23-ல் ரூ.17,298.67 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முறைகேடான 959 பத்திர பதிவு ஆவணங்கள் ரத்து:போலி ஆவணங்களை ரத்து செய்ய புதிய சட்டம் இயற்றப்பட்டு மாநிலம் முழுவதும் 10,555 மனுக்கள் மீது இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 959 ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழகத்தில் இயற்றப்பட்ட 'போலி ஆவணங்களை ரத்து செய்யும் பதிவு சட்டம் பிரிவு 77A'-யை (Section 77 A of the Registration Act) பின்பற்றி மற்ற மாநிலங்களும் இச்சட்டத்தை இயற்றும் முனைப்பில் உள்ளன என்றார். பதிவுத்துறையில் மக்களின் நலனுக்காக செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு புதிய மண்டலங்கள் மற்றும் ஆறு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பதிவுத்துறையில் 2021-22 ஆண்டில் 23 அலுவலகங்களுக்கும், 2022-23 ஆண்டில் 15 அலுவலகங்களுக்கும் ஆக மொத்தம் 38 அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர் ஆள்மாறாட்டத்தை அறவே ஒழித்திட ஆதார் தரவுடன் விரல்ரேகை மற்றும் கருவிழிப் படலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.