சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு ரசாயன உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜுன் மாதத்திற்கான உரத் தேவையான 27,340 மெட்ரிக் டன் யூரியா, 10,010 மெட்ரிக் டன் டிஏபி 6,160 மெட்ரிக் டன் பொட்டாஷ், 9,480 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால், 22,280 மெட்ரிக் டன் யூரியா, 9,980 மெட்ரிக் டன் டிஏபி, 8,040 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 13,180 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என்ற அளவில் டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி, தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25,310 மெட்ரிக் டன் யூரியா, 20,000 மெட்ரிக் டன் டிஏபி, 13,360 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 34,430 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளன.
நடப்பாண்டில் யூரியா மற்றும் டிஏபி உரங்களின் கூடுதல் தேவையினை நிறைவேற்றிட, ஒன்றிய அரசின் இணைச் செயலாளருக்கு (உரங்கள்) கடிதம் வாயிலாக ஜுன் மாதத்திற்கு கூடுதல் ஒதுக்கீடாக 20,000 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 10,000 மெட்ரிக் டன் டிஏபி உரத்தினை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காக்கிநாடா மற்றும் கிருஷ்ணாப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்துள்ள இறக்குமதி டிஏபி உரத்தில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்குமாறு, வேளாண்மை இயக்குநர் ஐ.பி.எல் நிறுவனத்தையும், கொரமண்டல் உர நிறுவனத்தையும் கோரியதைத் தொடர்ந்து, கடந்த ஜுன் மாதம் 25-ஆம் தேதியன்று வந்தடைந்த சரக்கு கப்பலிலிருந்து 10,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தினை கூடுதல் ஒதுக்கீடாக வழங்கியுள்ளது.
மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட உரம், விற்பனை அளவு, தினசரி உர இருப்பு வேளாண்மை இயக்குநரால் தினசரி ஆய்வு செய்யப்படுகிறது. உரத் தேவையின் அடிப்படையில், மாவட்டங்களை கண்டறிந்து அதற்கேற்ப உர விநியோகத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.