சென்னை:சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ( pallikaranai marshland) சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த ரமேஷ் ஆகியோர் இன்று (நவ.17) ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், " முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் என்ற திட்டத்தினை அறிவித்தார். அதன்படி இன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆய்வு செய்தோம். சதுப்பு நிலப்பகுதிக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றி சீரமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நடந்து வருகிறது. 7000 ஹெக்டேர் ஆக இருந்த நிலம் தற்போது 640 ஹெக்டேராக உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முழுவதுமாக மீட்கப்படும் குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டு வனமாக மாற்ற திட்டம் மேற்கொண்டு வருகிறோம். வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்கப்படும். சதுப்பு நிலத்தில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
சில இடங்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சதுப்பு நிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூர்யாவைத் தாக்குபவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் - மிரட்டல் விடுத்தவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு