சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, ஓட்டேரி ஏரியில் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், “தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக முதல்வர் பசுமை தமிழகம் என்னும் இயக்கத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவில் துவக்கி வைத்திருந்தார். இன்று தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கத்தை துவங்கியிருக்கிறோம்.
இது ஒரு முக்கியமான இயக்கம் இதுபோன்ற இயக்கங்களை எந்த அரசும் துவங்கியதே கிடையாது. திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழக முதலமைச்சர் இதுபோன்ற பொறுப்பு வாய்ந்த பணிகளை துவங்கியிருக்கிறார். ஈர நிலங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிட்டத்தட்ட 5 வருடங்களில் குறைந்தபட்சம் 100 ஈர நிலங்களை கண்டு அதை பேணி பாதுகாக்க வேண்டும்.
ராம்சார் தலங்கள் எனப்படும் ஈர நிலங்களில் 14 ராம்சார் தலங்களை கண்டெடுத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருக்கின்றது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 75 ராம்சார் தளங்கள் இருக்கின்றன, அதில் தமிழ்நாட்டில் உள்ள 14 இடத்தை முதலில் கண்டறிந்து அதையும் பாதுகாத்து கொண்டிருக்கிறோம். இதுபோன்று பல முக்கியமான பணிகளை வனத்துறை சார்பாக செய்ய உள்ளோம்.
இன்று அரிக்கொம்பன் யானையை மூன்று கும்கி யானை உதவிகளுடன் 200க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகளை ஈடுபடுத்தி ஒட்டுமொத்தமாக இணைந்து பிடித்து இருக்கிறோம். அதை எங்கு கொண்டு செல்லலாம் என்பதை இன்னும் வனத்துறை சார்பில் முடிவு எடுக்கவில்லை. யானை எங்கு இருந்தால் அதன் வாழ்வியல் பாதிக்காமல் அதற்கு உணர்ந்த இடமாக பார்த்து முடிவு எடுத்து அங்கு யானையை விடுவோம்.