தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனையாக விளங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Thirumavalavan news

கலைஞர் 4ஆவது ஆண்டு நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதனை கின்னஸ் சாதனையாக படைக்க இருக்கிறோம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனையாக விளங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனையாக விளங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

By

Published : Mar 18, 2023, 8:59 PM IST

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னையில் லிபர்டி மாரத்தான் நடைபெறுகிறது. இதற்கான இணையதள பதிவு மற்றும் டி சர்ட் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திருமாவளவன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனையாக விளங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இதனையடுத்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளைய சமுதாயத்திடம் மாரத்தான் மிகவும் பிரபலமாகி வருகிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் மாரத்தான் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குருதி கொடை உள்பட சமூக விழிப்புணர்வுக்காக மாரத்தான் நடத்தப்படுகிறது. கலைஞர் நினைவு மாரத்தான், கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. முதல் ஆண்டு ஆசியாவில் அதிகமானவர்களுடன் ஒடியது. 2வது மாரத்தான் போட்டி நடத்தி அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

3வது ஆண்டு சென்னையில் நடத்திய மாரத்தான் போட்டியில், 43 ஆயிரம் பேர் பங்கேற்று ஆசிய சாதனையாக படைக்கப்பட்டது. 2 ஆண்டுகள் பெறப்பட்ட பதிவுத் தொகை அரசுக்கு தரப்பட்டது. 3வது ஆண்டு நடத்தப்பட்ட மாரத்தான் பதிவுத் தொகையான 1 கோடியே 22 லட்சம் ரூபாய் பணத்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தங்கும் விடுதி கட்ட முதலமைச்சரிடம் தந்தோம். கலைஞர் 4வது ஆண்டு நினைவு மாரத்தான், வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்கிறது.

இதற்கான பதிவை, ஏப்ரல் 1ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த முறை மாரத்தான் போட்டியை கின்னஸ் சாதனையாக படைக்க உள்ளோம். மாரத்தானில் 1 லட்சத்திற்கு மேல் பங்கேற்க உள்ளோம். உலகிலேயே அதிகமான நபர்கள் பங்கேற்ற மாரத்தானாக கலைஞர் நினைவு மாரத்தான் இருக்கும். முதன் முறையாக சமத்துவத்திற்கான மாரத்தானில் ஒட உள்ளேன். 13ஆம் தேதி நடத்தும் மாரத்தானில் நாங்கள் கலந்து கொள்கிறோம்.

6ஆம் தேதி நீங்கள் (திருமாவளவன்) கலந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நடப்பது, ஓடுவதுதான் உடற்பயிற்சியில் சிறந்தது. இதற்காக ஒரு சிறந்த அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்" என கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், “சாதி ஒழிப்பு பற்றி பேசுகிறோம். ஆனால் சாதிப் பிண்ணனி குறித்து ஆராய்ந்தால்தான், அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

புத்தர் சொன்ன கருத்துக்கள் கூட பிரிவினைவாதத்தை நோக்கிச் சென்று விட்டது. போலிகள், பொய்யான செய்திகள் உலவுகிறது. வதந்திகள் பரவுகிறது. இவற்றை களத்தில் நேரிடையாக இருந்தால் புரிந்து கொள்ள முடியும். போராடிக் கொண்டு இருக்க வேண்டும். மக்களிடம் பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். விமானத்தில் என்னுடன் பயணம் செய்த வட இந்தியர் ஒருவர், நீங்கள் தமிழ்நாடா என்று பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களை உடைக்கிறீர்களே எனக் கேட்டார்.

நாங்கள் ஏன் உடைக்கிறோம் என்றேன். வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானது எனவும், கோயில்கள் இடிக்கப்படுவதாக நிறைய பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். சமூக வலைதளத் தகவலை மட்டும் நம்ப வேண்டாம், அது தவறான தகவல் என கூறினேன். மன்னர்கள்தான் வர்ணாசனத்தை உருவாக்கினார்கள். பிரமாணர்கள் செய்யவில்லை என தெரிவித்தார். என்னை அவருக்குத் தெரியவில்லை.

இதனால் நாம் எல்லாத் தளங்களிலும் வேலை செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை நோக்கிச் செல்ல வேண்டும். புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என அம்பேத்கர் நினைத்தார். மோடி கூட புதிய இந்தியா என சொல்கிறார். பழைய இந்தியாவில் சமத்துவம் இல்லை. சனாதான இந்தியா. சகோதரத்துவம் இல்லை. சமத்துவத்திற்காக ஓடுவோம்.

தொப்பையை அதிகமாக வளர்த்து இருக்கிறோம். நான் கூட 3 கிலோ மீட்டர் தூரம் ஓட முடியாது. ஓடிக் கொண்டு இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு பிரச்னைகள் இருக்கும். அதிகாரத்தில் இருக்கிறேன், பதவியில் இருக்கிறேன் என நாற்காலியிலேயே உட்கார்ந்து இருந்தால், ஆயுள் சீக்கரம் குறையும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ் மூதாட்டியின் காலைத் தொட்ட பிரதமர்.. வாஜ்பாய்க்குப் பின் மோடி.. சின்னப்பிள்ளைக்குப் பின் பாப்பம்மாள்..

ABOUT THE AUTHOR

...view details