சென்னை:தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதியோர் மனநலம் பாதுகாக்கவும், சமூக அளவில் தற்கொலை முயற்சிகளைத் தடுக்கவும் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோய் சிகிச்சைக்கான சேவைகளை வலுப்படுத்தவும்
தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழுமம், தொண்டு நிறுவனங்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தேசிய நல்வாழ்வுக் குழுமம் முற்போக்கு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 37 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்தம், டாயலிசிஸ் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் நேரடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம்: நம்மைக் காக்கும் 48 திட்டம்
மேலும், புதியதாக 'இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டம்' சாலை விபத்தினால் பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்றுவதற்காக 609 மருத்துவமனைகள் மூலம் விபத்து ஏற்பட்டால் பாதுகாக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மனிதாபிமானம் உள்ளவர்கள்கூட உதவ முன் வர மாட்டார்கள்
முன்பு விபத்து ஏற்பட்டால் உதவ முன்வர மாட்டார்கள். அதற்குக்காரணம் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவினால் காவல் துறையில் தொடர்ந்து விசாரணை செய்வார்கள் என்பதாலும், அதற்காகத் தொடர்ந்து அலைய வேண்டி இருக்கும் என்பதாலும், மனிதாபிமானம் உள்ளவர்கள் கூட உதவ முன் வர மாட்டார்கள். இதற்காகப் பல்வேறுத்துறைகளையும் இணைத்து புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்வு சிகிச்சைக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்
ஆனால், தற்பொழுது விபத்தைப் பார்த்து மருத்துவமனையில் சேர்த்துப் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டினால், அவருக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், விபத்தினால் பாதிக்கப்பட்டவர் எந்த மாநிலம், நாட்டினை சேர்ந்தவராக இருந்தாலும் சிகிச்சைக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்.
தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் தற்கொலையால் தான் இறக்கின்றனர், எனது நண்பரும் 5 முறைக்கு மேல் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றினோம். ஆனால், அவரும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார்.
தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
மேலும், தற்கொலை தடுப்பு தின விழாவில் கலந்து கொண்ட போது, மருத்துவர்களிடம் தற்கொலை இறப்பு குறித்து கேட்டபோது, தற்கொலை இறப்புக்கு சாணி பவுடர் அதிகம் சாப்பிட்டு இறக்கின்றனர்.
முன்பு வீட்டின் முன்பு சாணி பவுடர் தெளிப்பது கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது வீட்டில் சாணி பவுடர் வைத்திருப்பதால், அதனை எடுத்துச் சாப்பிட்டு இறக்கின்றனர். எனவே தொழில்துறையுடன் இணைந்து சாணி பவுடர் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல எலி மருந்து சாப்பிடுபவர்கள் இறக்கின்றனர். எனவே, எலி மருந்து தனியாக வருபவர்களுக்குக் கொடுக்கக் கூடாது எனவும், அதனை வெளியில் தெரியும் படி விற்பனை செய்யக் கூடாது எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனைப் பாதுகாப்பாக விற்பனை செய்வதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள்
அதேபோல, புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் மாநில அளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து பதிவு செய்து வருகிறோம். அதேபோல் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், 300 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைவிடச் சிறந்ததாக அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் விளங்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் பேசல.. பதறிய செல்லூர் ராஜூ.. சசிகலா ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?