சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ஈரோட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சிகிச்சையால் குணமடைந்த மணி என்ற நபரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(பிப்.27) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், "சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையுடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஸ்டான்லி, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
4 கோடி ரூபாய் செலவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஈரோட்டைச் சேர்ந்த 52 வயதான மணி என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த துறை இங்கு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இன்று, முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சை பெற்றுக் கொண்டால் 30 முதல் 35 லட்சம் செலவாகும், ஆனால் இங்கு தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.