சென்னை:ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் திமுக அரசு மக்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, திமுக அரசைக் கடுமையாகச் சாடி இருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு நான் அவரிடம் தட்டுப்பாடு எங்கு நிலவுகிறது என்று தெரிவித்தால், அதனை நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தேன். மேலும், தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் மூலம் (Tamilnadu Medical Service Corporation) தமிழ்நாட்டில் மருந்துகள் இருப்பு நிலவரம் குறித்தும் தெரிவித்திருந்தேன். ஆனால் இதனைக் கருத்தில் கொள்ளாமல் இன்றும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடுகளின் காரணமாகத் தமிழ்நாடு மருத்துவத் துறை பல்வேறு விருதுகளைக் கடந்த ஓராண்டாக வாங்கி வருகிறது. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 549 விருதுகள் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 310 விருதுகள் கிடைத்துள்ளது.
அதே போல் மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்டச் சான்றிதழ் (LaQshya – Labour Room Quality Improvement Initiative) 2017ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் 79 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 45 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், அவர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் எத்தனை முறை சுற்றி வந்திருக்கிறீர், எத்தனை மலைக்கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்றிருக்கிறீர், எத்தனை ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அமைச்சரோ சென்றிருக்கிறீர்கள். நாங்கள் எத்தனை முறை இதைச் செய்திருக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு, இதுகுறித்து எங்களிடம் நேரிடையாக விவாதிக்கத் தயாரா?
ஆகையால் எடப்பாடி பழனிசாமி ஆகிய நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்த ஒருவரோ சட்டமன்றம் நடக்கும்போது இதுகுறித்து பேசலாம். சட்டமன்றம் நடக்காதபோது எங்கேயோ ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டு பேசுவது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல.
எடப்பாடி பழனிசாமி மருந்து மாத்திரைகள் 30 நாட்களைக் கடந்தும் இல்லை என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.