தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா. சுப்ரமணியன் - MBBS courses in india

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

By

Published : Oct 17, 2022, 11:16 AM IST

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக் 17) வெளியிட்டார். இதுகுறித்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், "2022 - 2023ஆம் ஆண்டின் மருத்துவம், பல் மருத்துவம் படிப்பிற்கு அரசு, சுயநிதி மருத்துவ இடங்கள், நிர்வாக மருத்துவ இடங்களுக்கான விண்ணப்பங்கள் மொத்தமாக 22,736 விண்ணப்பம் பெறப்பட்டது.

இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 2,695, விளையாட்டு பிரிவில் 216, முன்னாள் படைவீரர் பிரிவில் 356 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரி அரசு இடங்கள் 6,067, பல் மருத்துவக் கல்லூரியில் 1,380 இடங்கள் உள்ளது. மேலும் 7.5% ஒதுக்கீட்டில் சுயநிதி கல்லூரி இடங்கள் எம்பிபிஎஸ் 454 இடங்கள், பிடிஎஸ் 104 இடங்கள் என மொத்தமாக 558 இடங்கள் உள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

மருத்துவ கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் விளையாட்டு, முன்னாள் படை வீரர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும், அன்று மாலையே சேர்க்கை அனுமதி வழங்கப்படும். பின்னர் 20ஆம் தேதி அரசு சுயநிதி கல்லூரிகளில் அரசு இடங்களுக்கான 7.5 சதவீத இடத்திற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலை 454 எம்பிபிஎஸ் மற்றும் 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு சேர்க்கை அனுமதி வழங்கப்படும்.

மேலும் 25ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கான இணைய வழி கலந்தாய்வும், 21 முதல் 27 வரை சுய நிதி ஒதுக்கீட்டிற்கான இணைய வழி கலந்தாய்வும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடைபெறும். இளநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர்களுக்கு 15.11.2022 அன்று கல்லூரிகள் தொடங்க உள்ளது. 7.5% உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தேவதர்சினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 518 மதிப்பெண் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இந்த ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு துறையின் சார்பில் வாழ்த்துகள். 7.5 % இட ஒதுக்கீட்டில் 558 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பை பயில உள்ளனர். இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாடங்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்” என தெரிவித்தார். இதன்படி 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் கலந்தாய்வு அட்டவணை,

முதல் சுற்று: அக்டோபர் 19ஆம் தேதி - விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று மாலையே அவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். 20ஆம் தேதி - அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்றே மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

19 முதல் 25ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கு இணைய வழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் 21 முதல் 27 ஆம் தேதி வரை சுயநிதி நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு இணையவழி வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. 26ஆம் தேதி முதல் சுற்று முடிவுகள் இணையவழியில் வெளியிடப்படும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சான்றுகள் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

30ஆம் தேதி முதல் சுற்று முடிவுகளை இணைய வழியில் வெளியிட உள்ளனர். மாணவர்கள் முதல் சுற்றில் சேர்வதற்கான இறுதி நாள் தேசிய மருத்துவர் குழுமம் 28.10.2022 அன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் தேர்வு குழுமம், 4.11.2022ஆம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டாவது சுற்று: 2.11.2022 முதல் 10.11.2022 வரை தேசிய மருத்துவ பிரிவினருக்கும், 7.11.2022 - 14.11.2022 வரை தமிழ்நாடு அரசின் மாணவர்களுக்கும் நடைபெறுகிறது. இரண்டாம் சுற்றின் முடிவுகள், தேசிய மருத்துவ பிரிவினருக்கு 11.11.2022 அன்றும் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு 15.11.2022 அன்றும் நடைபெற உள்ளது. இரண்டாம் சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 18ஆம் தேதியும், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு 21ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

முதன்மை சுற்று:தேசிய மருத்துவ பிரிவினருக்கு 23.11.2022 முதல் 1.12.2022 தேதி வரையிலும், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு 6.12.2022 முதல் 12.12.2022ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. முழுமை சுற்றில் சேர்வதற்கு இறுதி நாள் தேசிய மருத்துவ பிரிவினருக்கு 10.12.2022 அன்றும், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு 16.12.2022 அன்றும் நடைபெற உள்ளது.

விடுபட்ட காலியிடங்களுக்கான இறுதி சுற்று: தேசிய மருத்துவ பிரிவுக்கு 12.12.2022 முதல் 14.12.2022 வரையும், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு 17.12.2022 வரையும் நடைபெற உள்ளது. விடுபட்ட காலியிடங்களில் சேர்வதற்கு இறுதி நாள் 20.12.2022 அன்று தேசிய மருத்துவ பிரிவினருக்கும், 20.12.2022 அன்று தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது. வருகிற 202 2- 2023 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 15.11.2022 அன்று கல்லூரி தொடங்குகிறது.

இதையும் படிங்க:‘தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details