சென்னை:எழும்பூர் கண் நோய் மருத்துவமனை மற்றும் மண்டல ஆராய்ச்சி மையத்தில் மெட்ராஸ் ஐ(Madras Eye) பாதிப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியின் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'வடகிழக்கு பருவமழை காலங்களில் செப்டம்பர் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரையிலும் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் நோய் பரவல் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்தாண்டும் பருவ மழை தொடங்கிய நாளிலிருந்து மெட்ராஸ் ஐ பாதிப்பு கூடுதலாகி வருகிறது.
சென்னையில் கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் செயல்பட்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஓமந்தூரார், மருவத்தூர் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த இடங்களில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 மருத்துவமனைகளில் கண் நோய் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 4500 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள்:கண்கள் சிவந்து போதல், கண்ணில் தண்ணீர் வருதல், கண்ணில் அதிக அளவு அழுக்கு சேர்தல், கண் உறுத்தல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ நோய்க்கான அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த நோய்க்கு மருத்துவர்களின் ஆலோசனை இன்றி சுயமாக மருந்து எடுக்கக் கூடாது. அதேபோல் வீட்டில் ஒருவருக்கு வாங்கிய மருந்து மீதம் இருந்தால் மற்றவருக்கு பயன்படுத்தக் கூடாது.