தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலஸ்தீன எல்லை பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - இஸ்ரேலில் இருந்து தமிழர்கள் மீட்பு

பாலஸ்தீன எல்லை பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister M Subramanian said there are no Tamil people in the Palestinian border area
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 9:29 PM IST

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 7-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை கொண்டு அங்கிருந்து முதல் விமானத்தில் 212 பேரை அழைத்து வந்தது.

இதில் சென்னை-1, காஞ்சிபுரம் -2, மதுரை-1 கடலூர் -1, திருச்சி-3, திருவாரூர்-2, தேனி-3 புதுக்கோட்டை -1 என 14 பேர் விமானத்தில் சென்னை வந்தனர். மேற்படிப்புக்காகவும், திட்டப் பணிகளுக்காக மற்றும் சுற்றுலா சென்ற 114 நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றது.

இவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து பத்திரமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்தவர்களை அவர்களது குடும்பத்தார் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்ரமணியம் பேசுகையில், “இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

அங்கிருக்கும் தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் தமிழர்கள் தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து விவரங்களையும் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்தில் இடமும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடனும் பகிரப்பட்டு உள்ளது.

அயலக தமிழர் நலத்துறை சார்பில் பல்வேறு whatsapp குழுக்களை உருவாக்கி அங்கு இருக்கும் தமிழர்கள் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நாட்டில் இருந்து தாயகம் திரும்புவதற்கு பதிவு செய்யப்பட்ட கோவை, திருவள்ளூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 தமிழர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

அங்கிருந்து தமிழக அரசு சார்பில் அவர்களை வரவேற்று தற்போது சென்னை அழைத்து வரப்படுள்ளனர். இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பும் அனைத்து தமிழர்களுக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு டெல்லி, தமிழ்நாடு இல்லம் மூலம் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 14 நபர்கள் இண்டிகோ விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். மற்ற 7 நபர்கள் கோவை விமான நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சென்னை வந்து உள்ள 14 பேரில் இரண்டு மாணவிகள் 12 மாணவர்கள் பல்வேறு கல்வியை தொடர்வதற்கு அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து முதல் விமானத்தில் மொத்தமாக 214 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சார்ந்தவர்கள் இஸ்ரேலில் 114 பேர் இருப்பதாக அயலாக்க தமிழர் நலத்துறை சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த துறை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்து வரும் விமானங்களில் தமிழர்கள் 114 பேரும் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள். மாணவர்களின் கல்வி நலன் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து மாணவர்களின் கோரிக்கையை கேட்டு அதற்கு ஏற்ப என்ன மாதிரியான தீர்வுகளை ஏற்படுத்த முடியுமோ அதை செய்யப்படும். மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் உள்ளனர். அவர்களுக்கு கவுன்சிலிங் தேவையில்லை.

காசா போன்ற பாலஸ்தீன எல்லைப் பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை. மருத்துவ துறையின் மேற்படிப்புக்காக ஆராய்ச்சிக்கு சென்று உள்ளனர். சிலர் வேறு தேவைகளுக்காகவும் சென்று உள்ளனர். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களுக்கு என்ன தேவை என்பதை கேட்டு அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு உதவப்படும்” என்றார்.

அயலக தமிழர் நலத்துறை ஆணையக கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், “114 பேர் மீட்க வேண்டும் என கோரிக்கை வந்தது. தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இன்று இரவு ஒரு விமானம் வர உள்ளது. அங்கு உள்ள தமிழர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக” தெரிவித்தார்.

போர் சூழலில், இஸ்ரேலில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பியவர்கள், தமிழ்நாடு அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர். இஸ்ரேலில் இருந்து சென்னை வந்துள்ள மாணவர்கள் கூறுகையில், “அங்கு பெரிய அளவில் வெடிகுண்டு வெடித்தும் ராக்கெட் ஏவுகணைகள் பறந்து கொண்டும் இருக்கின்றன தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகே பயங்கரமான வெடி சத்தங்கள் கேட்கும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் நல்ல முறையில் அனைவரையும் மீட்டு வருகின்றனர். மீண்டும் தாயகத்திற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போர் முடிவுக்கு வந்த பின்பு தான் அங்கு மீண்டும் செல்வோம். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முதலில் நீங்கள் உங்கள் நாடு திரும்பி விடுங்கள் அதுக்கப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருக்கும் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன. இந்திய அரசும் தமிழக அரசும் மிகச்சிறப்பாக செயலாற்றி அனைவரையும் மீட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details