சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தரத்திற்கு ஏற்ப பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
தற்போது ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வந்த வண்ணம் உள்ளன. ஆகையால் இந்த நகராட்சிகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதே போல ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தவும், சில ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்தவும் கோரிக்கை வருவதாக அமைச்சர் நேரு கூறினார்.
எனவே, நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்த ஆய்ந்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், ஊராட்சி உள்ளாட்சிகள் அமைப்பு பதவி டிசம்பர் 2024 நிறைவடைவதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை எங்கு இணைக்கலாம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முதலமைச்சர் உத்தரவைப் பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதே போல அதிமுக அரசு 10 ஆண்டுகளில் குடிநீர் திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில், தற்போது 20 மாதங்களில் திமுக அரசு 38 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பதிலுரை அளித்த அமைச்சர் நேரு, சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை 2023 -ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றார். அதைத் தொடர்ந்து நெம்மேலிக்கு அருகிலுள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அமைச்சர் கே.என்.கூறினார்.
இதற்கு முன்னதாக பேசிய அமைச்சர் நேரு, கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் குடிநீருக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட நிலையில், கடந்த 20 மாதங்களிலேயே 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும், ஒன்றிய அரசு நிதி உதவி மற்றும் 36 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்" என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Rohini Theatre Issue: தியேட்டர் ஊழியர்கள் 2 பேர் மீது வன்கொடுமை வழக்கு - முழுப் பின்னணி!