சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தாமாக முன்வந்து கிரிமினல் மறு ஆய்வு மனு என்ற அடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும் இரு அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ 02) விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ”தான் விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிமன்றம் எடுக்க எந்த காரணமும் இல்லை என்று குறிப்பிட்டதுடன், சொத்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை, அப்போலோ மருத்துவமனைக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை எப்படி சட்டவிரோத வருமானம் என சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பினார்.