சென்னை:ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது எனவும்; துணைவேந்தர்கள் கூட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில், அவற்றை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்து வருகிறார்.
இதனிடையே, பல்கலைக்கழக நிர்வாகிகள் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடந்தது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில் சிண்டிகேட், செனட் உள்ளிட்டப் பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் நடைபெறவேண்டும் எனவும், பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு நடத்தப்படும் தேர்வுமுறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான கூட்டங்களை ஆளுநர் மாளிகையில் நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று (ஜூலை 6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டின் ஆளுநர் வழக்கமாக செய்யும் அரசியலைத் தொடர்ந்து செய்து வருகிறார். தனது அலுவலகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடைபெறுவதாக கூறும் ஆளுநர், துணைவேந்தர்கள் கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் ஏன் நடத்த வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
''இதுவரையில் செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல, சிண்டிகேட் மற்றும் மற்றவற்றைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? என்று ஆளுநர் யோசித்து பார்க்க வேண்டும். இத்தகைய விவகாரங்களிலும் ஆளுநர் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காகத்தான் இவ்வாறான செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையே ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கல்வித்துறையில் முதலமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சாதாரணமானதல்ல'' என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, உயர் கல்வித்துறை செயலாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஆளுநர் கூறியதாக குற்றம்சாட்டினார். மேலும், நாகப்பட்டினம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகைக்கு வந்து பட்டம் பெற வேண்டும் என ஆளுநர் கூறுவது சரியா? என கேள்வி எழுப்பினார்.