தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை அவரது கட்சி தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பார்வையிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருவரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயப்பிரதீப் சார்பாக எழை எளிய மக்களுக்கு அன்னதானம், அரிசி, இலவச புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.