சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.10) தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். வருகின்ற 15ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
கூட்டுறவுத் துறையின் மூலமாக கரோனா நிவாரணம் வழங்கும் பணி விரைந்து செய்து முடிக்கப்படும். பயோமெட்ரிக் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கப்படமாட்டாது. நிவாரணம் வழங்கும் நாள்களில் ரேஷன் கடைகளில் வழக்கம்போல் பொருள்கள் தடையின்றி வழங்கப்படும்.
ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் நிவாரண நிதியை பெறலாம். நிவாரண நிதி வழங்கும்போது கட்சியினர் தலையீடு இருக்காது. கரோனா நிவாரண நிதி ஒரு ரேஷன் கடையில் நாளுக்கு 200 பேருக்கு வழங்கப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் நிவாரணம் வாங்க முடியும்" என்றார்.
இதையும் படிங்க: தாது மணல் கொள்ளை குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்