சென்னை:"World Association for Small and Medium Enterprises" ஒருங்கிணைப்பில் ஒன்றிய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை மற்றும் தமிழ்நாடு காதி - துணிநூல் துறை மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஒத்துழைப்புடன் குளோபல்ஸ்பின் என்ற வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவு செய்யப்படும் பட்டு மற்றும் பருத்தி நூல் சேலைகள், வாழை நாரில் தயார் செய்யப்பட்ட நூலால் நெசவு செய்யப்பட்ட துணிகள், கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகள், பழங்குடியின மக்களின் தயாரிப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு காதி கிராமத்தொழில்கள் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் காந்தி,"கைத்தறி நெசவுத்தொழிலில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
காதி என்ற பிராண்ட்டை மேம்படுத்தி, கைத்தறி மற்றும் பல்வேறு பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். அந்த விற்பனையை மேம்படுத்த நிதி உதவி மட்டுமின்றி, பல்வேறு நவீன முறையில் விற்பனையை கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.