சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாகத்தான் நாட்டின் பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர முடிந்திருக்கிறது என்பதிலிருந்தே இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்திய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக உள்ள மணிப்பூர் என்ற மாநிலம் திட்டமிட்ட கலவரத்தால் பற்றி எரிவதும், குறிப்பிட்ட இனத்திற்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் நடைபெறுவதும் உலக அரங்கில் இந்தியாவிற்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டிருக்கிறது. இது பற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், ஆளும் தரப்பைச் சேர்ந்த அத்தனை பேரும் தி.மு.க.வையும் தமிழ்நாட்டையும் குறிவைத்துப் பேசி, மணிப்பூரில் தங்கள் ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள், தி.மு.க.வின் மக்களவை உறுப்பினரும், தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசாவைப் பார்த்துச் சிறைக்கு அனுப்புவோம் என்ற ரீதியில் பேசினார். “என்னைச் சிறைக்கு அனுப்புவதாக மிரட்டுவதா? நீதித்துறை உங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று ஆ.இராசா கேட்டதும் அமைச்சரிடம் பதில் இல்லை. அதுமட்டுமல்ல, “இந்தியா என்றால் வடஇந்தியா தான் என்று தமிழ்நாட்டில் தி.மு.க. அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவிப்பாரா?” என்றும் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க:ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் விவகாரம் - காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்துக்கு அழைப்பு!
அவர் மட்டுமல்ல, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மணிப்பூர் பற்றி பதில் சொல்லத் திறனின்றி தமிழ்நாட்டையும் தி.மு.க.வையும் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குப் பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே ஒன்றிய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளித்த நிலையில், நாட்டை ஆளக்கூடிய உயர்ந்த பொறுப்பில் 9 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களும் அதே வழியில் அவதூறான முறையில் நாடாளுமன்றத்தில் பேசியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.
எந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது, யார் எப்படி செயல்படுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளக்கூடிய உளவு அமைப்புகளை ஒன்றிய அரசு கொண்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமரிடம் எப்படிப்பட்ட தவறான தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன, அதை அவர் உறுதிப்படுத்தாமல் எப்படி பேசுகிறார் என்பதற்கு, இந்தியா என்றால் வடஇந்தியாதான் என்று பேசியதாக அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை பேசியிருப்பது காட்டியுள்ளது.
அண்மையில் பேராசிரியர் சுப.வீ அவர்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பிலான நிகழ்வில் நான் கலந்து கொண்டு பேசியதைத்தான் பிரதமரும் ஒன்றிய அமைச்சர்களும் திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வில், திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையை எடுத்துக்கூறி, அந்த வழியில்தான் திராவிட மாடல் அரசை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார் என்பதை எடுத்துக்கூறி உரையாற்றினேன்.
முன்பு இருந்த நிலை என்ன, இப்போதுள்ள நிலை என்ன என்பதை விளக்கும்போது, “ஒரு காலத்தில் இந்தியா என்ற வார்த்தையில்கூட நமக்கு பெரிய தாக்கம் இருந்தது கிடையாதே! நான் சொல்வது ஒரு காலத்தில். இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கிற ஊரு. நம்ம ஊரு தமிழ்நாடுதான். முடிந்தால் இதைத் திராவிடநாடாக்க முடியுமா என்று யோசிப்போம்” என்று முன்பிருந்த பழைய நிலைமையினைச் சுட்டிக்காட்டினேன்.