சென்னை:காவிரியில் நாளை முதல் 15 நாட்களுக்கு, தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 600 கன அடி நீர் திறக்க, காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நேற்று (அக்.30) பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வரும் நவ.3ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “காவிரி ஒழுங்காற்று குழு ஒழுங்காக பணியாற்றவில்லை. காரணம் நாளொன்றுக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடச் சொல்லி கேட்டிருந்தோம். ஆனால், 2 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடுகிறோம் என கூறியிருக்கிறார்கள். காவிரி நீர் மேலாண்மை குழு நவம்பர் 3ஆம் தேதி கூடுகிறது. அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றம் செல்ல வேண்டும்.
26.10.2022 வரை வழங்க வேண்டிய 140 டி.எம்.சி தண்ணீரில், அவர்கள் வழங்கியது 56.4 டி.எம்.சி மட்டுமே. பற்றாக்குறை 83.6 டி.எம்.சி -யாக உள்ளது. குறைபாடு விகிதாசாரம் நிலுவையாக 13.03 டி.எம்.சி கொடுக்க வேண்டும். அதில் 3.41 டி.எம்.சி நீர் தான் கொடுத்து இருக்கிறார்கள். குறைபாடு விகிதாசாரம் என நவம்பர் மாதம் கொடுக்க வேண்டிய தண்ணீர் 16.44 டி.எம்.சி. ஆனால் அதனையும் அவர்கள் கொடுக்கவில்லை.
இதுவரை இருந்த எந்த அரசும் இப்படி முரண் பிடித்தது இல்லை. எதிரி நாட்டோடு சண்டை பிடிப்பது போல நடந்து கொள்கிறார்கள். நாம் ஏதோ சலுகை கேட்பது போல நினைக்கிறார்கள். இந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் விதிக்கும் விதிமுறை படிதன் அனைத்து மக்களும் நடக்க வேண்டும். ஆனால் ஒரு மாநிலத்தின் அரசாங்கமே அப்படி நடந்துகொள்ளவில்லை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.