தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கல்விக்காக 7 கோடி நிலம் வழங்கிய பூரணம் அம்மாள்" - கௌரவிக்கப்பட உள்ளார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்! - ஆயி பூரணம்

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்! என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் பக்கத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

minister-anbil-mahesh-poyyamozhi-thanked-for-aayi-poornam-who-donated-her-land-to-school
"கல்விக்காக 7 கோடி நிலம் வழங்கிய பூரணம் அம்மாள்" - கௌரவிக்கப்பட உள்ளார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:24 PM IST

சென்னை: ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் மனைவி ஆயி என்ற பூரணம், தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தைத் தானமாக வழங்கினார்.

அதாவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பூரணம், சுமார் ரூ.4 கோடி மதிப்புமிக்க அந்த இடத்தை தனது மகள் "ஜனனி" நினைவாக அரசுக்கு தான பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அவருக்கு சமூக வலைத்தளங்களிலும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்த தகவல் அறிந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நேற்று (ஜன.12) ஆயி பூரணம் பணிபுரியும் வங்கிக்கு நேரில் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்று பதிவிட்டார்.

அதில் "ஆயி பூரணம் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது. முதல் நாள் சுமார் 7 கோடி மதிப்புள்ள நிலத்தைக் கல்வித் துறைக்குக் கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன்" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது X பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!

மதுரை, ஒத்தக்கடை, கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் தொண்டு மகத்தானது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பூரணத்தால் பூரணமாகும் ஏழை மாணவர்களின் கல்விக் கனவு - நிலக்கொடை தந்த மதுரை பூரணம் அம்மாளின் வரலாறு

ABOUT THE AUTHOR

...view details