சென்னை:அரசுப்பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொள்கிறார். இதற்கான அழைப்பிதழை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து வழங்கினார்.
திமுக ஆட்சி அமைந்த பின்னர், உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000, அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்புக்கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத்திட்டத்தின் தொடக்க விழா, செப்டம்பர் 5ஆம் தேதி வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
புதுமைப்பெண் திட்டத்தொடக்கவிழா... அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் அழைத்த அன்பில் மகேஷ் மேலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு புதுமைப்பெண் திட்டம் எனப் பெயரிட்டுள்ளனர். புதுமைப்பெண் திடத்தினைத் தொடங்கி வைக்கவும், 15 மாதிரிப்பள்ளிகள், 28 சீர்மிகுப் பள்ளிகள் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இன்று(ஆக.30) வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா..? நீதிமன்றம் கூறியது என்ன?