சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சாட் ஜிபிடி(ChatGPT) தொழில்நுட்பங்களைக் கற்பிக்க உள்ளதாகவும், இதற்கான பாடத்தைக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் இந்தியாவில் முதல்முறையாக 'TEALS திட்டம்' தமிழ்நாட்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 13 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தை, 100 பள்ளிகளில் விரிவுபடுத்துவதற்கான தொடக்கவிழா சென்னையில் இன்று(ஜன.11) நடைபெற்றது. மைக்ரோசாப்ட் TEALS திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, "17 ஆயிரம் பள்ளிகளில் 34 லட்சம் மாணவர்கள் தினமும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்படுகின்றனர் . புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களே எடுத்துக்காட்டாகச் சான்றாக இருப்பீர்கள். தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல மாணவர்களை மேம்படுத்துகிறோம். பல டெக்னாலஜி வந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் படியுங்கள் கல்விதான் முக்கியம், கல்வி தான் யாரும் பறிக்க முடியாதா சொத்து என முதலமைச்சர் அடிக்கடி சொல்லுவார். உங்களுக்கு ஒரு தாயாகத் தந்தையாக இருப்போம். படிப்பில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள்" என்று அறிவுரை கூறுவார். அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, "அனைவரும் ஒரே மையப் புள்ளியில் இணைந்து உள்ளோம்.
தமிழ்நாட்டின் கல்வித்துறையைப் பார்க்கும் போது எந்த அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கரும்பலகை முன் நின்று பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஈடாக முடியாது. முதலமைச்சர் சொல்வதைப் போலப் படிப்பில் மாணவர்கள் தங்களது கவனத்தைச் செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசு, தனியார் என்று பாகுபாடு இல்லாமல் கல்வி அறிவை தருவது தான் அரசின் கடமையாக இருக்கிறது. அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதைப் போதித்தவர் பெரியார். அந்த வகையில் வந்தவர்கள் தான் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்" எனப் பேசினார்.