சென்னை: தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். வருகிற ஜூன் 1ஆம் தேதி, 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேபோல், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட பொருட்களை வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படுவது குறித்தும், ஆசிரியர்களை நியமிப்பது குறித்தும், தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகிற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என்றும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாயப் பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.