பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளி வளாகத்தில், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட இளம் கலாம் அறிவியல் மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி திறந்து வைத்தார். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர், “பட்ஜெட்டில் 36 ஆயிரதது 859 கோடி ரூபாய் பள்ளிக்கல்வித் துறைக்கு வழங்கப்பட்டிருப்பது முதலமைச்சர் சொல்வதுபோல் கல்வி மற்றும் மருத்துவம் தனது இரு கண்கள் என்பதை வெறும் வார்த்தைகள் இல்லாமல் பட்ஜெட் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.
பள்ளிக்கல்வி கட்டடங்களின் தரங்களை மேம்படுத்தவும், 18 ஆயிரம் வகுப்புகளை சீரமைக்கவும், 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் கோடி என கணக்கீடு செய்து, இந்த ஆண்டுக்கு மட்டும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர ஆர்வத்தை ஏற்படுத்த ஆயிரம் ரூபாய் அளிக்கவுள்ள அறிவிப்பும் வரவேற்பு பெற்றுள்ளது” என்றார்.
பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அல்வா கொடுக்கும் பட்ஜெட் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, “விமர்சனத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை, விமர்சனத்தை விமர்சனமாக திருப்பி சொல்லாமல் அதனை செயல்படுத்தி காட்டுவதுதான் முதலமைச்சரின் ஸ்டைல்” என விளக்கமளித்தார்.
இதையும் படிங்க:' பெண்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் புரட்சிகரமானது' - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து