கடந்த சனிக்கிழமை அன்று ஆவின் தினம் கொண்டாடப்பட்டது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில், தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி இருக்கிறதே, ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நடைமுறையில் மாட்டுத் தீவனங்கள் எல்லாம் விலை அதிகரித்து இருக்கிறது. அந்த சூழ்நிலைக்கு ஏற்ப விலையை உயர்த்தி இருக்கிறார்கள். அதனடிப்படையில் நாங்களும் ஆவின் பால் விலையை உயர்த்த முதலமைச்சரிடம் பேசி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இது குறித்து பால் முகவர்கள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறது. அதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களே கடந்த 2014ஆம் ஆண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.8 என அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினார். ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 என உயர்த்தியதும், தனியார் பால் நிறுவனங்கள்அதே ஆண்டில் 12.00 ரூபாய் வரை உயர்த்தியதும் தனிக் கதை.
அது நடந்து 5ஆண்டுகள் ஆகப் போகிறது. மாட்டுத் தீவனங்கள், இதர செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துவிட்டன. பால் உற்பத்தியாளர்களும் பசும் பால் லிட்டருக்கு ரூ.35 ஆகவும், எருமைப்பால் ரூ.45 ஆகவும் உயர்த்தி வழங்கக்கோரி பலக்கட்ட கவன ஈர்ப்பு விசயங்களை செய்துவிட்டனர். ஆனால் நீங்களோ தேர்தல் கணக்குகளை மனதில் கொண்டு அதனை காதில் வாங்கி கொள்ளாமலேயே கடந்து விட்டீர்கள்.
பால் கொள்முதல் விலையை காரணம் காட்டி தனியார் பால் நிறுவனங்கள் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பல முறை விற்பனை விலையை உயர்த்திவிட்டன. பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை இதுவரை எவ்வளவு உயர்த்தி வழங்கின என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்களை அழிக்கும் முயற்சியாக "குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் வரக் காரணம் தனியார் பால் நிறுவனங்கள் செய்யும் பால் கலப்படம்" என கடந்த 2017ஆம் ஆண்டு மிகப்பெரிய அணுகுண்டை தூக்கிப் போட்டீர்கள். நீங்கள் ஏன் அப்படி பேசினீர்கள் என்பது உங்களது மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். இந்த சூழ்நிலையில் தற்போது "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை" போல தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்வுக்கு மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வை காரணமாக காட்டி சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்.
ஆவின் பால் விற்பனையை உயர்த்த தமிழகத்திலேயே பரந்து, விரிந்த சந்தை இருக்கையில் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஆவின் நிறுவனத்தின் சக்தியை வீணடிக்கிறீர்கள்.அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசுத்துறை பால் நிறுவனங்கள் எல்லாம் வளர்ச்சியை நோக்கி வீறு நடை போடுகையில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் வளர்சசியில்லாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்பதை நாங்கள் பலமுறை சுட்டிக் காட்டிய பிறகும் கூட அதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறீர்கள்.
அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசு துறை பால் நிறுவனங்களைப் போல ஆவின் நிறுவனமும் வளர்ச்சியை நோக்கி வீறு நடை போட தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்களுக்கு நேரடியான வர்த்தக தொடர்புகளை வழங்கிட உத்தரவிடுங்கள்.சுமார் 16ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஆவின் பால் விற்பனைக்கான கமிசனை உயர்த்திட ஆணையிடுங்கள். பிறகு பாருங்கள் ஆவின் நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடை போடுவதை கண்கூடாக காண்பீர்கள்.
உண்மையில் ஆவின் நிறுவனத்தின் மீதும், பால் உற்பத்தியாளர்கள் மீதும் உங்களுக்கு அக்கறை இருக்குமானால் ஆவின் நிறுவனத்தில் உள்ள கறுப்பு ஆடுகளை எல்லாம் களையெடுத்து, ஆவின் நிறுவனத்தின் உள்ளே ஊழல் பெருச்சாலிகள் நுழையாவண்ணம் பாதுகாப்பை பலப்படுத்துங்கள். ஆவின் நிறுவனம் படிப்படியாக உயரும்.இதை நீங்கள் செய்வீர்களா? ஆவின் நிறுவனத்தின் மீதான உண்மையான அக்கறையோடு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் என குறிப்பிட்டுள்ளனர்.