தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை வேண்டும் - பால் முகவர்கள் சங்கம்

சென்னை: ஆவின் நிறுவனத்தின் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Milk agents association press release
பால் முகவர்கள் சங்கம் மாநிலத் தலைவர் பொன்னுசாமி

By

Published : Jul 28, 2020, 8:12 AM IST

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆவின் நிறுவனத்தின் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (பிஎம்சி) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடி பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து, கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பால் கொள்முதல் செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அதிரடி பறக்கும் படை அமைத்திட வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் 13 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் சிலவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கே பணியாற்றிய திருமங்கலம் ஆவின் மேலாளர் உள்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவின் நிறுவனத்தின் நலன் மீது அக்கறை கொண்டு, தொடர்ந்து செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மாநிலம் முழுவதும் 25 ஒன்றியங்களில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலில் விற்பனைபோக, உபரியாகும் பால் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பி பவுடராக மாற்றி இருப்பு வைப்பதுதான் வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் இருந்து நடைமுறைக்கு மாறாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொழிற்சாலைக்கு உபரி பால் அனுப்பப்பட்டு, பால் பவுடராக மாற்றிய பிறகு சுமார் இருநூறு டன் ஆவினுக்கு வந்து சேராமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பால் முகவர்கள் சங்கம் மாநிலத் தலைவர் பொன்னுசாமி

எனவே, ஆவின் பால் பண்ணைகளில் பால் பவுடராக மாற்றுவதற்கான போதிய வசதிகள் இருந்தும், விதிமுறைகளுக்கு மாறாக தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அலுவலர்கள் யார்? என்பது குறித்தும், திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து மட்டுமின்றி வேறு எந்தெந்த மாவட்ட ஆவினில் இருந்து தனியார் பால் தொழிற்சாலைக்கு பால் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும்.

தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பால், பவுடராக மாற்றிய பிறகும் ஆவினுக்கு இன்னும் வந்து சேராமல் இருப்பது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இதையும் படிங்க: பசும் பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் கைது

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் தமிழ்நாட்டில் பால் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. அதனால் பால் கொள்முதல் விலையும் கடும் சரிவை கண்டு, உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமலும், கறவை மாடுகளை பராமரிக்க முடியாமலும், மாட்டுத்தீவனம் வாங்கிட முடியாமல் அல்லல்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அயல்நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதித்தால், நமது பால் உற்பத்தியாளர்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதனால் மாடுகளை பராமரிக்க முடியாமல், இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள்.

எனவே பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் பால் மற்றும் பால் பொருள்கள் இறக்குமதிக்கான அனுமதியை ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுகிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ஆவின் முறைகேடு: சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details