சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் பொருட்டு வாகன தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனையாளர்களோ புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று உள்ள இரண்டு தலைக்கவசம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் இந்தத் திட்டத்தினால் பெரிய அளவில் நன்மைகள் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் மட்டுமின்றி மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போரும் அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.